முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 6
முரண்பாடு 25: யாத்திராகமம் 6:2-3ல் கர்த்தர் பின்வருமாறு கூறியதாக சொல்லப்படுகின்றது: மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா, சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன். ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை. - யாத்திராகமம் 6:2-3 இந்த வசனத்தில் கர்த்தர் மோசேயிடம், தான் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் தரிசனமானதாகவும் ஆனால் அவர்களுக்கு அவரது நாமமான 'யேகோவா' என்றப் பெயர் தெரியாது என்றும் கூறியதாக இந்த வசனத்தில் சொல்லப்படுகின்றது. இதை சற்று தெளிவாக wbtc தமிழ் மொழிப்பெயர்ப்பில் கீழ் கண்டவாறு கூறப்படுகின்றது: பின் தேவன், மோசேயை நோக்கி, நானே கர்த்தர். நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு தரிசனமானேன். அவர்கள் என்னை எல்ஷடாய் (சர்வ வல்லமையுள்ள தேவன்) என்று அழைத்தார்கள். அவர்களுக்கு யேகோவா (கர்த்தர்) என்னும் எனது பெயர் தெரிந்திருக்கவில்லை. - யாத்திராகமம் 6:2-3 ஆனால், இந்த வசனத்திற்கு நேர் மாற்றமாக, ஆபிரகாமுக்கு கர்த்தரின் பெயரான 'யேகோவா' என்றப் பெயர் தெரிந்ததாகவும் அதன் பெயரிலேயே அவர்கள் கர்த்தரை தொழுதுக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது. ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே (Jehovahjireh) என்று பேரிட்டான். அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. - ஆதியாகமம் 22:14 இந்த வசனத்தில் ஆபிரகாமுக்கு கர்த்தருடைய நாமமான 'யேகோவா' என்றப் பெயர் தெரிந்துள்ளது என்பதும், அதனாலேயே அவர் பெயரை உள்ளடக்கிய - யேகோவாயீரே - கர்த்தர் பார்க்கிறார் - என்ற பொருள் படக்கூடிய ஒரு பெயரை வைத்தான் என்கிறது. யேகோவா என்ற பெயரே ஆபிரகாமுக்குத் தெரியாது என்றால் எப்படி யேகோவா - யீரே (கர்த்தர் பார்க்கிறார்) என்று ஆபிரகாம் பெயர் வைத்தார்? அதேபோன்று இன்னும் பல இடங்களில் ஆபிரகாம் கர்த்தரை யேகோவா என்றப் பெயரிலேயெ தொழுது கொண்டதாக கூறப்படுகின்றது. ஆபிரகாம் பெயர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான். - ஆதியாகமம் 21:33 இந்த இடத்தில் தமிழ் பைபிளில் பெயர்செபாவில் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை ஆபிரகாம் தொழுதுகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இங்கே கர்த்தருடைய நாமத்தை என்ற இடத்தில் 'யேகோவா' என்ற வார்த்தையே மூல மெழியிலும் பல ஆங்கில மொழிப்பெயர்ப்புகளிலும் இடம் பெற்றுள்ளது. அந்த பெயரிலேயே ஆபிரகாம் தொழுதுகொண்டதாக கூறப்படுகின்றது. And Abraham planted a tamarisk in Beer-sheba, and called there on the name of Jehovah, the Eternal ùGod. - Darby bible Translation And Abraham planted a tamarisk tree in Beer-sheba, and called there on the name of Jehovah, the Everlasting God. - American Standard Bible இங்கே ஆபிரகாமுக்கு தேவனாகிய கர்த்தரின் பெயராகிய 'யேகோவா' என்ற பெயர் தெரியும் என்று கூறப்படுகின்றது. ஆனால் யாத்திராகமம் 6:2-3ம் வசனங்களோ தெரியாது என்கிறது. இதில் எது சரி? (இதே போன்று இன்னும் பல இடங்களில் யோகோவா என்ற பெயரையே உபயோகித்ததாக சில ஆங்கில பைபிள்களிலும் எபிரேயு பைபிள்களிலும் கூறப்படுகின்றது. பார்க்க ஆதியாகமம் 26:23-25 மற்றும் ஆதியாமம் 28:21 (ஈசாக்கு யோகோவா என்று அழைத்ததாக கூறப்படுகின்றது) முரண்பாடு 26: மனிதன் மொத்தம் எத்தனை ஆண்டுகள் வாழ்வான் என்பதை அறியாதவரா கர்த்தர்? அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை, அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். - ஆதியாகமம் 6:3 இந்த வசனத்தில் மனிதன் உலகத்தில் வழப்போகிற நாட்கள்; மொத்தமே 150 வருடம் தான் கர்த்தர் கூறியதாக என்று பைபிள் குறிப்பிடுகின்றது. ஆனால் இந்த வசனத்திற்கு மாற்றமாக நோவா வாழ்ந்ததோ 950 வருஷம் என்று ஆதியாகமம் 9:29 ல் சொல்லப்படுகின்றது. அதேபோல் இன்னும் பல பேர் பல நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழ்ந்ததாக இதே பைபிளின் இதே ஆதியாகமத்திலேயே சொல்லப்படுகின்றது. பார்க்க ஆதயாகமம் 11:11-17. இதில் எது சரி? மனிதனின் மொத்த ஆயுளே 150 வருடங்கள் தான் என்றிருந்தால் எப்படி நோவா 950 வருடம் வாழ்ந்தார்? அதே போன்று இன்னும் பல பேர் எப்படி பலநூறு ஆண்டுகள் வாழ்ந்தார்கள். ஒரே ஆகாமத்தில் - ஒரே ஆசிரியரால், அதுவும் கர்த்தரின் பரிசுத்த ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்ட பைபிளில் இப்படிப்பட்ட முரண்பாடு வராலாமா? உன்மையிலேயே கர்த்தரால் தான் இந்த வசனங்கள் அருள்பட்டிருந்தால் இந்த முரண்பாடு வருமா? அல்லது எழுதியவருக்கு ஞாபகக் குழப்பமா? முரண்பாடு 27: கர்த்தர் மணஸ்தாபப்படுவாரா? மாட்டாரா? பைபிளின் பழைய ஏற்பாட்டு புத்தகமான 1 சாமுவேல் 15:10-11ம் வசனங்கள் பின்வருமாறு கூறுகின்றது: அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது. அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார். அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். - 1 சாமுவேல் 15:10-11 அதாவது முற்றும் அறிந்த கர்த்தர், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறியாதவர் போன்று மணம் வருந்தியதாக இந்த வசனத்தில் சொல்லப்படுகின்றது. ஆனால் இதற்கு நேர் முரணாக இதே 1 சாமுவேல் 15:29ம் வசனத்தில் பின்வருமாறு சொல்லப்படுகின்றது: இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை. தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை. மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான். - 1 சாமுவேல் 15:29 கர்த்தர் மனஸ்தாபப்படுவரா? மாட்டாரா? கர்த்தர் மனஸ்தாபப்பட்டாரா? இல்லையா? ஒரே புத்தகத்தில் அதுவும் ஒரே அதிகாரத்திலேயே இப்படி தெளிவான முரண்பாடு வரலாமா? இதில் உள்ள இன்னொரு கொடுமையையும் பாருங்கள். அதாவது, மேலே 1 சாமுவேல் 15:10-11ம் வசனத்தில் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதாக சொல்லிவிட்டு, அதே புத்தகத்தின் அதே அதிகாரத்தின் 15:29ம் வசனத்தில் கர்த்தர் மணஸ்தாபப்படமாட்டார், அப்படி மணஸ்தாபப்படுவதற்கு அவர் ஒன்றும் மனிதன் அல்ல என்று எழுதிவிட்டு பின்னர் அதே புத்தகத்தின் அதே 15ம் அதிகாரத்தின் 35ம் வசனத்தில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது: 'சவுல் மரணமடையும் நாள்மட்டும் சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை. இஸ்ரவேலின்மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம், சாமுவேல் சவுலுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான். - 1 சாமுவேல் 15:35 என்ன கொடுமை பார்த்தீர்களா? ஒரே புத்தகத்தின் ஒரே அதிகாரத்தில் உள்ள குளறுபடிகள் இவை? முதலில் எடுத்துக்காட்டப்பட்ட வசனங்களில் (15:10-11) தான் செய்த ஒரு செயலுக்காக கர்த்தர் மனஸ்தாபப்பட்டதாக கூறிவிட்டு அடுத்து சொல்லப்பட்ட வசனத்தில் (15:29) இப்படி எல்லாம் கர்த்தார் மனஸ்தாபப்படும் அளவுக்கு அவர் ஒன்றும் மனுபுத்திரன் அல்ல கூறி முரண்படுகின்றது. அதன் பிறகு மீண்டும் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம் சாமுவேல் துக்கித்துக்கெண்டதாக கூறப்படுகின்றது. இந்த வசனங்களை கர்த்தர் தான் அருளினார் என்று நம்பினால் அதனால் கர்த்தரின் கண்ணியத்திற்கும் அவரின் மகத்துவத்திற்கும் இழிவு ஏற்படுத்தியது போல் ஆகாதா? ஒரு புத்தகத்தில் ஒரே ஆசிரியரால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் புத்தகத்தில் அதுவும் ஒரே அதிகாரத்தில் இப்படிப்பட்ட குளறுபடிகள் இருக்கின்றதே இதை எப்படி கர்த்தரின் புனித வேதமாக ஏற்றுக்கொள்ள முடியும்? இதே போன்று இன்னொறு இடத்திலும் முற்றும் அறிந்த கர்த்தர் மனிதனைப்படைத்ததற்காக மணஸ்தாபப்பட்டதாகவும் எழுதப்பட்டுள்ளது பார்க்க ஆதியாகமம் 6: 6-7 இது குறித்து கூடுதல் தகவல்களை பார்க்க இங்கே அழுத்தவும் முரண்பாடு : 28 பாவ நிவாரனப்பலியிலும் முரண்பாடு: இஸ்ரவேலர்களின் புனித நாட்களைப்பற்றியும் அந்நாட்களில் செய்ய வேண்டிய கடமைகள் பற்றியும் பைபிளின் எசேக்கியேல், எண்ணாகமம் என்ற இரண்டு ஆகாமங்கள் கூறுகின்றன. வழக்கம் போலவே இந்த இரண்டு ஆகாமங்களிலும் அனேக முரண்பாடுகள்: இந்த இரண்டு ஆகாமங்களிலும் பாவ நிவாரணப்பலி பற்றி சொல்லப்படுகின்றது : முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே புளிப்பில்லாத அப்பம் புசிக்கப்படுகிற ஏழுநாள் பண்டிகையாகிய பஸ்கா ஆரம்பமாகும். - எசேக்கியேல் 45:21 இதே கருத்தை எண்ணாகமும் கூறுகின்றது: முதலாம் மாதம் பதினாலாம் தேதி கர்த்தருக்கு உரிய பஸ்கா. - எண்ணாகமம் 28:16 ஆனால் இந்த நாளில் என்ன செய்யவேண்டும் என்பதை இரண்டு ஆகாமங்களும் முரண்பாட்டுக் கூறுகின்றது: முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே புளிப்பில்லாத அப்பம் புசிக்கப்படுகிற ஏழுநாள் பண்டிகையாகிய பஸ்கா ஆரம்பமாகும். அந்நாளிலே அதிபதி தன்னிமித்தமும் தேசத்து எல்லா ஜனங்களிநிமித்தமும் பாவநிவாரணத்துக்காக ஒரு காளையைப் படைப்பானாக. ஏழுநாள் பண்டிகையில், அவன் அந்த ஏழுநாளும் தினந்தோறும் கர்த்தருக்குத் தகனபலியாகப் பழுதற்ற ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் தினந்தோறும் படைப்பானாக. ஒவ்வொரு காளையோடே ஒரு மரக்கால் மாவும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவுமான போஜனபலியையும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைப்பானாக. ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதியில் ஆரம்பமாகிற பண்டிகையிலே அவன் அப்படியே ஏழுநாளும் அதற்குச் சரியானபிரகாரமாகப் பாவநிவாரணபலிகளையும் தகனபலிகளையும் போஜனபலிகளையும், எண்ணெயையும் படைக்கக்கடவன். - எசேக்கியேல் 45:21-25 ஆனால் இதற்கு மாற்றமாக எண்ணாகமம் வேறுவிதமாக கூறுகின்றது: அந்த மாதம் பதினைந்தாம் தேதி பண்டிகைநாள். ஏழுநாளளவும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும். முதலாம் நாளில் பரிசுத்த சபை கூடுதல் இருக்கவேண்டும். அன்றைத்தினம் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது. அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கேற்ற போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும், ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும், உங்கள் பாவநிவிர்த்திக்கென்று பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். காலையிலே நித்தமும் செலுத்தும் சர்வாங்க தகனபலியையும் அன்றி இவைகளையும் செலுத்தக்கடவீர்கள். இந்தப்பிரகாரம் ஏழுநாளளவும் நாடோறும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தக்கடவீர்கள். நித்தமும் செலுத்தப்படும் சர்வாங்க தகனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இதையும் செலுத்த வேண்டும். ஏழாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும் அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது. - எண்ணாகமம் 28:17-25 எசேக்கியேல் ஆகாமத்தில் பழுதில்லாத ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் தகனப் பலியாகச் செலுத்த வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் எண்ணாகமத்திலோ, இதற்கு மாற்றமாக இரண்டு காளைகளையும் ஒரு ஆட்டுக்கடாவையும் ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் பலியிட வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. இரண்டில் எது சரி? எந்த முறையின் படி பலி செலுத்த வேண்டும்? அதேபோல் எசேக்கியேல் ஆகாமத்தில் பாவ நிவாரணப் பலியாக ஒரு காளை மாட்டைப் படைக்கவேண்டும் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் அதற்கு நேர் மாற்றமாக எண்ணாகமத்திலோ, பாவ நிவாரணப்பலிக்காக ஒரு வெள்ளாட்டுக்கடாவை செலுத்த வேண்டும் என்று கூறப்படுகின்றது. அதே போல் போஜனப்பலிக்காக சொல்லப்படும் முறையிலும் இரண்டு ஆகாமங்களிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றது. இதே போன்று இன்னும் அனேக முரண்பாடுகள் இந்த இரண்டு ஆகாமங்களிலும் உள்ளது. இவை எல்லாம் கர்த்தரால் தான் கூறப்பட்டது என்றால் எப்படி இத்தனை முரண்பாடுகள் வரும்?
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 5
பைபிளின் முதல் புத்தகமான ஆதியாகமத்தில் இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைக்கப்பட்டது பற்றி கூறப்படுகின்றது. அவற்றிலும் ஏராளமான முரண்பாடுகளும் குழப்பங்களும், எதார்த்தத்திற்கு மாற்றமான செய்திகளும், விஞ்ஞானத்திற்கு முரனான செய்திகளும் மலிந்து காணப்படுகின்றது. அவற்றில் சில முரண்பாடுகள் இதோ: முரண்பாடு 20: முதலில் படைக்கப்பட்டது மனிதர்களா? அல்லது தாவரங்களா? ஆதியாகமம் 1 ம் அதிகாரத்தில் மனிதர்களையும் தாவரங்களையும் படைத்தது பற்றி கூறும்பொழுது முதலில் தாவரங்களே படைக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே மனிதர்கள் படைக்கப்பட்டதாகவும் கூறுகின்றது. அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்: அது அப்படியே ஆயிற்று. பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.- ஆதியாகமம் 1:11-13 இந்த வசனங்களில் மூன்றாம் நாளிலேயே தாவரங்கள் படைக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகின்றது. அடுத்து மனிதன் எப்பொழுது படைக்கப்பட்டான் என்பதை பின்வரும் வசனங்களில் குறிப்பிடப்படுகின்றது: தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார் ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். பின்னும் தேவன்: இதோ, பூமியின் மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார் அது அப்படியே ஆயிற்று. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று. - ஆதியாகமம் 1:27-31 இந்த வசனங்களில் மிகத் தெளிவாக அறாம் நாளில் தான் மனிதர்கள் படைக்கப்பட்டதாகவும், அதற்கு 3 நாட்களுக்கு முன்பே தாவரங்கள் படைக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இதற்கு நேர் மாற்றமாக இதே ஆதியாகமத்தின் 2 ம் அதிகாரத்தில் இந்த வசனங்களுக்கு நேர் முரணான செய்தி காணப்படுவதை பாருங்கள்: தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே. நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை. அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். - ஆதியாகமம் 2:4-7 இந்த வசனங்களில் கர்த்தர் மனிதனைப் படைத்தது பற்றி கூறப்படுகின்றது. ஆனால் அச்சமயம் வரை புற்பூண்டுகளோ தவாரங்களோ பூமியில் முளைக்கவில்லை என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனங்களில் 3ம் நாளிலே கர்த்தர் பூமியில் புற்பூண்டுகளை முளைபிக்கச் செய்ததாகவும் அதன் பின் ஆறாம் நாளில் தான் மனிதன் படைக்கப்பட்டான் என்றும் கூறப்படுகின்றது. இதில் எந்த அறிவிப்பு சரியானது? முதலில் படைக்கப்பட்டது எது? ஒரே ஆகாமத்தில் அதுவும் கர்த்தரின் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட புத்தகத்தில் இப்படிப்பட்ட முரண்பாடுகள் வரலாமா? முரண்பாடு 21: ஏவாள் படைக்கப்பட்டது எப்போது? ஆதியாகமத்தில் கர்த்தர் மனிதனைப் படைத்ததைப் பற்றி பின்வருமாறு கூறப்படுகின்றது: தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். - ஆதியாகமம் 1:27 இந்த வசனத்தில் கர்த்தர் மனிதனைப் படைத்ததாகவும், அப்போதே ஆணையும் பெண்னையும் - இருவரையும் - படைத்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் அதே ஆதியாகமத்தின் 2:20ல் பின்வருமாறு கூறப்படுகின்றது. அப்படியே ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவித காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான். ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை. - ஆதியாகமம் 2:20 இந்த வசனத்தில் ஆதாம் படைக்கப்படும் வரை ஆதாமுக்கு துணையாக யாரும் படைக்கப்படவில்லை என்றும், அதன் பிறகே ஏவாள் படைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது (மேலும் பார்க்க ஆதியாகமம் 2:21-25) உன்மையில் ஏவாள் எப்போது படைக்கப்பட்டார்? ஒரே புத்தகத்திற்குள்ளேயே ஏன் இந்த முரண்பாடு? உன்மையில் கர்த்தரின் பரிசுத்த ஆவியின் ஏவுதலால் தான் எழுதப்பட்டது என்றால் இப்படி முரண்பாடு வருமா? முரண்பாடு 22: முதலில் படைக்கப்பட்டது மனிதர்களா? அல்லது மிருகங்களா? தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார் தேவன் அது நல்லது என்று கண்டார். பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார் ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். - ஆதியாகமம் 1:25-27 இந்த வசனங்களில் முதலில் மிருகங்கள் மற்றும் ஆகாயத்து பறவைகள் படைக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே மனிதன் படைக்கப்பட்டான் என்றும் கூறப்படுகின்றது. அதோடு கூடுதலாக அவற்றை ஆளும் சக்தியையும் மனிதனுக்கு கர்த்தர் கொடுத்ததாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால், இதற்கு மாற்றமாக இதே ஆதியாகமத்தில் சொல்லப்படும் மற்றொரு செய்தியை பாருங்கள்: பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். தேவனாகிய கர்த்தர் வெளியின் சகல வித மிருகங்களையும், ஆகாயத்தின் சகல விதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார். அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. - ஆதியாகமம் 2:18-19 இந்த வசனங்களில் மனிதன் படைத்தபின்னர் தான் அனைத்து மிருகங்களும் ஆகாயத்துப் பறவைகளும் உண்டாக்கப்பட்டதாகவும், அந்த மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் பெயர் வைத்ததே ஆதாம் தான் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனங்களில் மிருகங்களைப் படைத்ததற்குப் பின்னர் தான் மனிதன் படைக்கப்பட்டான் என்று சொல்லப்படுகின்றது. இதில் எந்த அறிவிப்பு சரியானது? முரண்பாடு 23: ஆகாயத்து பறவைகள் எதன் மூலம் படைக்கப்பட்டது ? ஆகாயத்து பறவைகள் நீரிலிருந்து படைக்கப்பட்டதாக ஆதியாகமம் 1ம் அதிகாரம் கூறுகின்றது: பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார். தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர்வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார் தேவன் அது நல்லது என்று கண்டார். - ஆதியாகமம் 1:20-21 ஆனால் இந்த வசனங்களுக்கு நேர் மாற்றமாக இதே ஆதியாகமத்தின் 2ம் அதிகாரத்தில் ஆகாயத்து பறவைகளும் இன்னும் சில உயிரினங்களையும மண்ணிலிருந்து படைத்ததாக கூறப்படுகின்றது: தேவனாகிய கர்த்தர் வெளியின் சகல வித மிருகங்களையும், ஆகாயத்தின் சகல விதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார். அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. - ஆதியாகமம் 2:19 ஆகாயத்து பறவைகளும் இன்னபிற உயிரினங்களும் தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டதா? அல்லது மண்ணிலிருந்து படைக்கப்பட்டதா? முரண்பாடு 24: நட்சத்திரங்கள் படைக்கப்பட்டது எப்போது? பூமி படைக்கப்படுவதற்கு முன்பா அல்லது அதன் பிறகா? முதலில் பூமி படைக்கப்பட்டது என்றும் அதன் பிறகே நட்சத்திரங்கள் படைக்கப்பட்து என்றும் ஆதியாகமம் கூறுகின்றது : ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். - ஆதியாமம் 1:1 இதே ஆதியாகமத்தின் மற்றொரு இடத்தில் : தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார் தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று. - ஆதியாகமம் 1:16-19 இந்த வசனங்களில் முதலில் பூமி படைக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே நட்சத்திரங்கள் படைக்கப்பட்டதாகவும் - அதாவது பூமி படைக்கப்பட்டு 3 நாட்கள் கழித்து நான்காம் நாளில் தான் நட்சத்திரங்கள் படைக்கப்பட்டதாகவும் இங்கே சொல்லப்படுகின்றது. ஆனால் யோபு என்ற புத்தகத்திலோ இதற்கு நேர் முரணான செய்தி பதிவுசெய்யப்பட்டுள்ளது: நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே. - யோபு 38:4-7 இந்த வசனத்தில் நட்சத்திரங்கள் படைக்கப்பட்ட பின்னரே பூமி படைக்கப்பட்டதாகவும் அச்சமயம் விடியற்கால நட்சத்திரங்கள் ஏகமாயப்ப பாடியதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் மேலே சொல்லப்பட்டுள்ள ஆதியாகமத்தின் வசனங்களிலோ முதலில் பூமி படைக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் மூன்று நாட்கள் கழித்து நான்காம் தினத்தன்றே நட்சத்திரங்கள் படைக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது? இதில் எந்த புத்தகம் சொல்வது சரியானது? முதலில் படைக்கப்பட்டது பூமியா அல்லது நட்சத்திரங்களா?
0 comments:
Post a Comment